Sunday, 3 February 2019

ரஜினி அவர்களுடனான சந்திப்பு


ரஜினி அவர்களுடனான சந்திப்பு - முழு விவரங்கள் எழுத முடியவில்லை என்றாலும் பலர் எழுப்பிய சில முக்கிய கேள்விகளுக்கு இங்கே எனது சொந்த கருத்தாகப் பதில் கொடுத்துவிடுவது நல்லது என்று நினைக்கிறேன். 01) "அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? பாராளுமன்ற தேர்தல் பற்றி நிலைப்பாடு என்ன?" "முதலில் இதைத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும், 100% அரசியல் வருவது உறுதி, தமிழக சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு". என்று கூறிய ரஜினி அவர்கள் கொடுத்த தெளிவு என்னவென்றால் கட்சி ஆரம்பித்துத் தேர்தல் அரசியலைச் சந்திக்க ஒரு அரசியல் கட்சிக்கு வேண்டிய அடிப்படை கட்டமைப்பு (Framework) 90% மேல் ஏற்பாடுகள் முடிந்து, முழு தயார் நிலையில் கட்சி உள்ளது இது தான் உண்மை நிலவரம். அந்தக் கட்டமைப்பு தான் மிக அவசியமானது அதைத் தீவிரமாக செய்து முடித்துள்ளார். குழப்பத்தை ரசிகர்களிடையே உருவாக்க சில பத்திரிக்கையாளர்கள் வேண்டும் என்றே எழுதி வருகிறார்கள் அதை ரசிகர்கள் கண்டு கொள்ளத் தேவை இல்லை. இரண்டாவது இந்தப் பாராளுமன்ற தேர்தல் சந்திக்க போவது பற்றி ரஜினி அவர்களே கூறுவது தான் நல்லது. ------------------------------------------------ 02) "கட்சி அறிவிப்பதில் தாமதம் ஏற்படுத்துவது போல் உள்ளதாகத் தோன்றவில்லையா? அவருக்குப் பின் சொன்ன கமல் போன்றவர்கள் கட்சி ஆரம்பித்து வேலையைச் செய்து கொண்டிருக்க இது மிகத் தாமதம் இல்லையா?” எனக்கு வந்த நம்பகமான தகவல்கள் அடிப்படையில் சென்ற தீபாவளி முடிந்து இல்லை அதற்கு முன் அறிவிப்பு வருவதற்கான வாய்ப்பு தான் இருந்தது. அதற்குக் காரணம் வழுவில்லாத தமிழக அரசு கவிழும் சூழல் இருந்தது. மத்திய அரசும் இங்கே நிலைதன்மை இல்லாத அரசை விரும்பவில்லை. அது மாநில நலனுக்கு நல்லது கிடையாது என்று நினைத்திருந்தது. அப்படி ஆட்சி கலைக்கப்பட்டால் அதற்கு முன் ரஜினி அவர்கள் கட்சி தயார் நிலையில் இருக்க வேண்டும் தேர்தலை சந்திக்க. ஆனால் சூழல் மாறியுள்ளது. இன்றும் நிலையில்லாத தமிழக ஆட்சி தான் நடக்கிறது என்றாலும் - இதை பிஜேபி மத்திய தலைமை தாங்கிப் பிடித்துக்கொண்டுள்ளது காரணம் மாநில பிஜேபியின் விருப்பம். எனவே ஆட்சி கவிழும் வரை கொஞ்சம் பொறுமை காப்பது நல்லது. அதுவரை கட்சி அறிவிப்பு செய்வதில் கொஞ்சம் பொறுமை அவசியம். ----------------------------------------------------- 03) “ஏன் கட்சி அறிவிப்பைத் தாமதப்படுத்த வேண்டும்? அறிவிப்பதில் என்ன சிக்கல் வந்துவிடும்?” "இங்கே பலர் கூறுவது போல் கட்சி பெயர், கொடி அறிவித்து - கட்சி மாநாடு நடத்தி கட்சி அறிவிப்பு செய்து முடிக்கலாம் தாராளமாக. அதில் என்ன பெரிய கஷ்டம் இருக்கிறது? ஒன்றும் இல்லை. 50,000 பூத் கமிட்டி நபர்களுக்கு மேல் நியமனம் செய்து - மாநிலம் முழுவதும் 12 மாநகராட்சி, 148 நகராட்சி, 561 பேரூராட்சிகள்,12,618 ஊராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள் நிர்வாகிகளை நியமனம் செய்து தீவிரமாக அந்தச் சிக்கலான, கடினமான இந்த வேலையைச் செய்து முடித்த ரஜினி அவர்களுக்கு - கொடி, ஒரு மாநாடு தேதி - கட்சி பெயர் அறிவிப்பு கொடுக்க எவ்வளவு நேரம் ஆகும்?" அப்படி அறிவித்தால் அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தலைச் சந்திக்க வேண்டும். அது தான் சரி. இது தேர்தல் அரசியல். தேர்தலை எப்படி வெற்றிகரமாக எதிர்கொள்வது என்பது மிக மிக அவசியமான புத்திசாலித்தனம். அரசியல் அறிவிப்புக்கு முன் ரஜினி அவர்களுக்கு 18% அளவில் இருந்த மக்கள் ஆதரவு இருந்தது - சென்ற 2017டிசம்பர் மாதம் அரசியல் அறிவிப்பை வெளியிட்ட காலத்தில் 21% முதல் 24% அளவிற்கு வாக்கு கிடைக்கும் என்ற அளவிற்கு நல்ல ஆதரவு நிலை உருவானது. காரணம் நான் சொல்லி தெரியவேண்டிய அவசியம் இல்லை. ஒன்று ரசிகர்கள், இரண்டு மக்கள் மத்தியில் கெட்ட பெயர் இல்லை அவருக்கு. தனிப்பட்ட மனிதராகக் குடும்ப வாழ்விலும் சரி, பொது வாழ்விலும் அவருக்குக் கெட்ட பெயர் கிடையாது. ஆனால் சமீபத்திய ஆய்வு தகவல் கொடுக்கும் விசயம் 21% அளவிற்கு இருந்த இந்த ஆதரவு இன்று 17%-18% ஆகக் குறைந்துள்ளது. ஏன் என்றால் தொடர்ந்து அவர் மீது விமர்சனங்களை எப்படி எதிர்மறையாகப் பரப்புவது என்று கட்சி சார்புடைய பத்திரிக்கையாளர் வேலை செய்கிறார்கள். செய்தியைப் பரப்புகிறார்கள். என்ன பேசினாலும் பிரச்சனையாக உருவகம் செய்ய வேண்டும் என்று வேலை செய்கிறார்கள். அதன் மூலம் மக்கள் மத்தியில் இந்த வரவேற்பைக் குறைக்க முடியும். இது அரசியல், அப்படி தான் இருக்கும். எனவே அறிவித்த சில மாதங்களில் தேர்தலை சந்திப்பது என்றால் மட்டுமே அது ஆரோக்கியமாக இருக்கும். தவிர அறிவித்துவிட்டு கமல் அவர்கள் போல் இருந்தால் நிச்சயம் இன்னும் பெரும் இழப்பு ரஜினி அவர்களுக்கு. "மக்கள் மத்தியில் அந்த அதிர்வு அந்த எதிர்பார்ப்பு அந்த ஆதரவு அலையோடு தேர்தலை சந்திக்க வேண்டும் அது தான் சரி அது தான் தேர்தல் அரசியலில் இருக்க வேண்டிய அவசியமான புத்திசாலித்தனம். ரஜினி அதைச் சொன்னார் இதைச் சொன்னார் என்று தனக்கு வேண்டிய பத்திரிக்கையாளர்களை வைத்து அவதூறு பரப்பி மக்களிடம் அந்த அதிர்வைக் குறைத்துவிடுவர் அரசியலில் இருக்கும் மற்ற கட்சிகள். திராவிட கட்சிகள் பற்றி நான் சொல்ல தேவை இல்லை. எவரும் இங்கே அரசியல் செய்ய வரக்கூடாது. ஆக இது புரிகிறதா??? அந்த அலை அதிர்வு இல்லை என்றால் நீங்கள் என்ன செய்தாலும் வெற்றி தேர்தல் அரசியலில் கிடைக்காது. அடுத்து அரசியல் கட்சி அறிவித்த உடன் குறைந்தது 6 மாதங்கள் உள்ளாகத் தேர்தலை சந்திப்பது தான் தமிழ் நாட்டு அரசியலுக்கு நல்லது. அதற்காக சில மாதங்கள் கூடுதலாக காத்திருப்பதில் தவறில்லை என்று கருதுகிறார். ---------------------------------------------------------------- 04) “தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டுமா ரஜினி அவர்கள்? என்னப்பா அடுத்து 3 படமா?” என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். 1972களில் எம்ஜிஆர் அரசியல் கட்சி ஆரம்பித்தாலும் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று நினைத்தார். "உரிமைக் குரல்”, “நினைத்ததை முடிப்பேன்”, “நாளை நமதே”, “இதயகனி”, “நீதிக்குத் தலைவணங்கு”, “ஊருக்கு உழைப்பவன்" இப்படி படங்கள் எல்லாமே அவர் அரசியலுக்கு வந்த பின் தான் நடித்தார். படங்கள் வழியாக அரசியல் பேசினார். "திமுக மாநாடுகள் நடத்தி மக்களிடம் சென்று சேரவேண்டும். தெருமுனை கூட்டங்கள், கிராம கூட்டம், மேடைகள் என்று இப்போது கூட திமுக மதிமுக போன்ற கட்சிகள் ஆரம்பித்து பாமக வரை மக்களிடம் தொடர்பை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் எம் ஜீ ஆர் போன்றவர்களுக்கு இருக்கும் சாதகமான விசயம் திரைப்படம். மக்களிடம் சென்று சேர மிகச் சிறந்த சக்திவாய்ந்த சினிமா இவரிடம் இருக்கும் போது எதற்கு அவர் பொது கூட்டங்கள் வழியே சென்று சேர வேண்டும்??? எனவே ஒரு பக்கம் கட்சி என்றால் சினிமாவில் தான் தொடர்ந்து நடிக்க விரும்பினார். அதே தான் ரஜினி அவர்களுக்கும் நல்லது. ஒரு படம் பேட்டை. அது அரசியல் கட்சிகள் 100 பொதுக் கூட்டம் நடத்தி என்ன அதிர்வை உருவாக்குமோ அதை ஒரு படம் உருவாக்கும். அந்த அளவிற்குச் சக்தி கொண்ட ஊடகம் அது. மக்கள் தொடர்புக்கும் அருமையான ஊடகம் சினிமா அதில் இருக்கும் போது அவர் எதற்குச் சினிமாவில் நடிப்பதை நிறுத்த வேண்டும்??? அரசியலில் வெற்றி வேண்டும் என்று நினைத்தால் தேர்தல் நேரம் நெருங்கும் வரை கொஞ்சம் திரைப்படம் வழியாக அரசியல் பேசி மக்கள் மத்தியில் மனதின் அருகில் இருப்பது நல்லது. திரைப்படத்தை நிறுத்திவிட்டு மாநாடுகள் நடத்துவதை விடத் தவறான வழி வேறு இல்லை. எனவே தேர்தல் சந்திக்கும் வரை ரஜினி அவர்கள் இந்த விசயத்தில் எம்ஜிஆர் என்ன செய்தாரோ அதே பாணியில் செல்வது தான் சரி. அதிமுக அரசு கவிழும் சூழல் ஏற்படக் கட்சி அறிவித்து அரசியல் உள்ளே முழுமையாக வந்துவிடுவதே சால சிறந்தது. {அதிமுக தற்போதைய அரசு கலைக்கப்படவில்லை என்றாலும் கவிழும் எளிதாக இந்த இடைத்தேர்தல் வந்தாலே போதும். எனவே அது தூரம் இல்லை.} ---------------------------------------------------------------- 05) “ஆட்சி கவிழும் என்றால் அடுத்த முதல்வர் போட்டி யார் யாருக்கு இருக்கும்? ரஜினி அவர்களுக்கு அதில் இருக்கும் வாய்ப்பு என்ன?” தற்போதைய ஆட்சி கவிழும் என்றால் ரஜினி, ஸ்டலின், TTV தவிர மற்ற எவரும் சொல்லி கொள்ளும் அளவிற்கு முதல்வர் வேப்பாளராக இல்லை. அன்புமணி ராமதாஸ், விஜயகாந்த் எனக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இல்லை ஆனால் அவர்கள் முதல்வர் எண்ணம் ஏறக்குறையச் சென்ற தேர்தலோடு முடிவுக்கு வந்துவிட்டது. எனவே வரும் தேர்தல் இந்த ரஜினி, ஸ்டாலின், TTV. ஆட்சி கவிழும் போது தான் உண்மையாகவே அதிமுக உடையும். எனவே இதில் அதிமுக பெரும் பிளவில் நிற்பதால் நேரடி போட்டியாக வரப்போவது ஸ்டாலின் மட்டுமே. ஸ்டாலின் அவ்வளவு வழுவான தலைமை கொண்டவர் அல்ல என்பதால் ரஜினி அவர்களுக்கு இது இந்த முறை மக்கள் மட்டத்தில் பிடித்த முதல்வர் வேப்பாளராக இருப்பார் என்பதில் வேறு கருத்து இல்லை. அந்த வகையில் 37% வாக்குகள் மேல் வாங்கினாலே ஆட்சியை கைபற்றிவிடலாம் இந்தவிதம் மூன்று பேர் போட்டியில். கூடுதலாக 15 வாக்குகள் நடுனிலையாளார் வாக்குகள் பெறவேண்டும். அதுவும் எளிது தான். மக்களும் மாற்றம் எதிர்பார்க்கிறார்கள். எனவே இன்றும் ரஜினி அவர்களுக்கு வாய்ப்பு குறையவில்லை. நேரம் சரியாக இருந்தால் மட்டுமே இந்த 37% கிடைக்க வழியுண்டு. --------------------------------------------------------------- 06) சமீபத்திய படங்களில் இந்து எதிர்ப்பு பற்றி நேரடியாகக் கேள்வி எழுப்பும் அனைவருக்கும் நான் சொல்ல விரும்புவது "நல்லது நடக்கும். புரிந்து கொள்ளுங்கள்". அதிகம் விளக்கம் கொடுக்க விரும்பவில்லை. எந்த மாற்றமும் ரஜினி அவர்களிடம் இல்லை. அதே “ஆண்டவன் சொல்றான் அருணாசலம் செய்யுறான்” ரஜினி தான். குழப்பம் அவசியம் இல்லை. "திராவிட, கம்யுனிஸ்ட், மற்றும் பிற பிரிவினைவாத சக்திகள் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றால் கொஞ்சம் தந்திரம் அவசியம்". ஆன்மீக அரசியல் என்று அவர் கூறுவருவது என்னவென்றால் "ஆன்மீகம் என்பது குரு வணக்கத்தில் தொடங்கி தாய் தந்தையர் வணக்கம் தொட்டு கடவுள் தொழுதல் வரை அனைத்துமே ஆன்மீகமே. அது அவசியம் மனிதனுக்கு வேண்டிய ஒன்று அது சமூகத்திற்கு நல்லது. ஆன்மீக எண்ணம் - பயபக்தியை உருவாக்கி - மனசாட்சிக்கு எதிராக மனிதன் செல்வதை முடிந்த அளவு தடுக்கும். அது சமூக அமைதிக்கு நல்லது. ஆனால் மற்ற மத நம்பிக்கைகளை மதித்து நாகரீகமாக எட்டி நிற்கப் பழகி கொள்ள வேண்டும்" என்பது தான் ரஜினி அவர்களின் எண்ணம் தவிர எவரையும் காயபடுத்துவது நோக்கம் அல்ல. இதில் எவரையும் காயபடுத்து அவர் விரும்பவில்லை - ஆக மேற்கொண்டு சொல்வதற்கு எதுவும் இல்லை. ----------------------------------------------------------------- 07) ரஜினி மக்கள் மன்ற பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது உண்மையா??? இல்லை, நிச்சயம் தொய்வு இல்லை. ஆனால் கண்காணித்து களையெடுக்கும் பணி நடக்கிறது. "நிர்வாகிகள் எல்லோருமே என் ரசிகர்கள் நான் நம்பிக்கை கொண்ட நபர்கள். ஆனால் சில நிர்வாகிகள் போக்கு சரியல்ல. கட்சி ஆரம்பிக்கும் முன்பே திருத்தப்பட வேண்டிய ஆட்கள் அவர்கள். ஒரு நிர்வாகி நியமனம் செய்துவிட்டால், அப்படியே எடுத்து கட்சி வேலையைச் செய்ய வேண்டும். அதை விட்டு விட்டு அவன் அந்த ஜாதி இவன் இந்த ஜாதி அவனுக்குக் கீழ் வேலை பார்க்க முடியாது இந்த மாதிரி சிந்தனை எல்லாம் இருக்கும் ஒருவர் நிச்சயம் ரஜினிக்கு ரசிகராகக் கூட இருக்க முடியாது" என்றார். படித்த நாகரீக சமூகம் இதைச் செய்யுமா??? அதை அனுமதிக்க முடியாது என்பதில் திட்டவட்டமாக இருக்கிறார். "ஜாதி மதமில்லா ஆன்மீக அரசியல் என்று நான் மேடையில் பேசவோ அரசியலுக்காகவோ மட்டும் சொல்லவில்லை. கட்சி கொள்கையில் அடிப்படையே இதுவாக தான் இருக்க வேண்டும். பேசுவது ஒன்று செய்வது வேறு என்று இருக்க நம்மை மக்கள் அனைவரும் எப்படி மாற்று அரசியல் கட்சியாக பார்ப்பர்?. இல்லை இப்படி சிந்தனையை வைத்துக் கொண்டு என்ன ஆரோக்கியமான அரசியல் கொடுத்துவிட முடியும்?” என்கிறார் ரஜினி. அத்துடன் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகத்தில் 10, 15 வருடங்கள் ரசிகர்மன்ற நடவடிக்கைகளில் இருந்தார்கள். நிச்சயம் அது அங்கீகரிக்கப்பட வேண்டிய விசயமே. பல காலமாக ரஜினி அவர்களுடன் நின்றார்கள், அதை மதிக்க வேண்டும். ஆனால் இன்று அரசியல் உள்ளே வருகிற போது சினிமா என்ற வட்டத்தைத் தாண்டி நாட்டின் நிர்வாகம் அது சார்ந்த கொள்கை முடிவுகள் நோக்கி நகரும் போது திறமையுள்ள நேர்மையான சிந்தனை உள்ள நல்ல மனிதர்களை இணைத்துக் கொண்டு பயணிக்கத் தயார் ஆக வேண்டும். அதாவது அரசியல் மாற்றத்தை உருவாக்கவும் ஆட்சி நிர்வாக மாற்றத்தைக் கொடுக்கவல்ல திறமையான நபர்களுக்குக் கட்சியில் உரிய இடம் கொடுக்கப்பட வேண்டும். அது புரிந்து கொள்ளாது அப்படி வரும் திறமையான நபர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுப்பது கவலை தரும் விசயம். இந்த தவற்றை திருத்தவில்லை என்றால் இன்னொரு திராவிட கட்சியாகத் தான் இருக்குமே ஒழிய வேறு ஏதுவாகவும் இருக்காது தனது கட்சி என்று தெளிவுபடுத்தினார் திரு ரஜினி. திராவிட அரசியல் கடந்த 40 ஆண்டுகளில் தங்களுக்கு தலையாட்டும் அடிமைகளைத் தேடினார்கள். அதனால் தான் நிர்வாகம் இப்படி இருக்கிறது. அங்கே அரசியல் தாண்டி திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் எண்ணம் வந்திராது போனதால் தான் நிர்வாகம் சீரழிந்து நிற்கிறது. அந்த தவற்றை ரஜினி அவர்கள் செய்ய விரும்பவில்லை என்கிறார். அடுத்து மிக மிக முக்கியமான விசயம் ரஜினி மக்கள் மன்றம் = "ரஜினி ரசிகர்களும் மக்களும் இணையவேண்டிய ஒரு இடம்”. அது வெறும் ரஜினி ரசிகர் மன்ற கூட்டம் அல்ல. மக்கள் உள்ளே வரவேண்டும். அந்தத் தெளிவு முதலில் நிர்வாகிகளுக்கு வேண்டும். அதற்குக் களத்தில் மக்களைச் சந்தித்து தொடர்பு ஏற்படுத்த வேண்டும். அதை விடுத்து ரஜினி ரசிகர்களை மட்டும் இணைக்கும் இடமாக மாற்ற நினைப்பது மிகவும் தவறான போக்கு. இன்னொரு ரசிகர்களுடன் சண்டை போட அவசியம் இல்லை. 40 வருடம் மேல் தென்னிந்திய சினிமா உலகத்தில் முடிசூடா மன்னனாக இருக்கிறார். இதற்கு மேல் என்ன வேண்டி இருக்கு? எனவே அடுத்த தலைமுறையுடன் சண்டை போடுவது அவசியமற்றது. அனைத்துத் தரப்பு மக்களையும் ரசனையையும் மதித்து அரவணைத்துச் செல்லும் பக்குவம் பெற வேண்டும் அதுவே இன்று அவசியம். அடுத்து "காசு செலவு செய்தேன், செலவு செய்கிறேன் என்று சிலர் வருவது மிக வருத்தம் தரும் விசயம். நான் அதை என்றும் எதிர்பார்க்கவில்லை. இன்று இவர்கள் காசு செலவு செய்து என்ன எதிர்பார்க்கிறார்கள்? ஆட்சிக்கு வந்தால் இரண்டு மூன்று மடங்கு எடுக்கலாம் என்றா? நேர்மையாக வெளிப்படையான ஆட்சி கொடுப்போம் என்று சும்மா நான் எல்லா அரசியல்வாதிகளும் பேசுவது போல் மேடைகளுக்காகப் பேசுகிறேன் என்று நினைக்கிறார்கள் இவர்கள்", என்று கூறியவர் "மீண்டும் மீண்டும் தெளிவாக கூறிவிட்டேன் காசு பணம் சம்பாதிப்பதற்காக எவராவது கட்சி நோக்கி வருவார்கள் என்றால் தயவுக்கூர்ந்து இப்போதே விலகி விடுங்கள். இல்லை வெளியேற்றப்படுவது உறுதி. இதைச் சகித்துக்கொள்ள முடியாது” என்று உறுதியாக ரஜினி அவர்கள் கூறினார். இது போல் ஒரு முக்கியமான லிஸ்ட் ரஜினி அவர்களிடம் இருக்கிறது. இந்த விதம் மன்ற நிர்வாகிகள் சார்ந்த பிரச்சனைகள் கட்சி ஆரம்பிக்கும் முன்பே சரி செய்யப்பட வேண்டும் என்று நினைக்கிறார் ரஜினி அவர்கள். இல்லை இந்த சில தவறான நிர்வாகிகளால் அனைவரது உழைப்பும் கேள்விக்குறியாகும். அதற்கு நிறுத்தி வைத்து சாட்டையை எடுக்க வேண்டிய நேரம் இது. அதனால் நிறுத்தி வைத்துக் கண்காணிக்கப்படுகிறார்கள். சீக்கிரம் களையெடுப்பு நடந்து மீண்டும் அடுத்த கட்ட வேலைகள் ஆரம்பம் ஆகும் என்று தெளிவுபடுத்தினார். எனவே தொய்வு போல் தோன்றி இருக்கலாம், ஆனால் நிச்சயம் தொய்வு இல்லை. "உங்கள் நேர்மைக்கான அங்கிகாரமும் ; உங்கள் உழைப்பிற்கான ஊதியமும் நிச்சயம் கிடைக்கும். எனவே குழப்ப அவசியமற்றது" இது ரஜினி அவர்கள் எண்ணம். -------------------------------------------------------------------------- இறுதியாக : நான் மேலே கூறியவை அனைத்தும் ஏறக்குறைய 1 மணி நேரச் சந்திப்பில் நான் புரிந்து கொண்டதை வெளியிட்டுள்ளேன். இதை ரஜினி மக்கள் மன்றம் நிர்வாகிகள் ஆரம்பித்து ரசிகர்கள் வரை புரிந்து கொள்வீர் என்று நம்புகிறேன். உண்மையில் சில விசயங்களை எடுத்து வெளிப்படையாகக் கூற முடியவில்லை என்றாலும் ரஜினி மிகச் சரியாக தெளிவாகவே அரசியல் சதுரங்கத்தில் நகர்கிறார். அரசியலுக்கு உள்ளே முன்பே துரோகங்கள் ஆரம்பமாகியுள்ளன - அவை அனைத்தையும் ரஜினி அவர்கள் எதிர் கொள்ள தொடங்கிவிட்டார். இந்தக் கடினமான காலத்தை எதிர்கொள்வதில் அவருக்குத் தயக்கம் இல்லை. வெற்றிக்குக் கொஞ்சம் பதுங்குவது தவறில்லை. இவ்வளவு தூரம் வந்தாகிவிட்டது கூடுதலாக சில மாதங்கள் பொறுத்திருப்பதில் தவறில்லை. வெளியில் வெளிப்படையாகத் தெரியவில்லை என்றாலும் தனி மனிதராக அரசியலில் அவர் போராட்டம் மிகத் தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது என்பது தான் உண்மை". அதை நிர்வாகிகள் உணரவேண்டும். இந்த நேரத்தில் நீங்கள் ரஜினி அவர்கள் சொல்லும் சொல்லுக்குத் தட்டாமல் நிற்க வேண்டும் என்பது மட்டுமே என் வேண்டுகோள். 100% நான் உங்கள் அனைவருடனும் நின்று என்னால் என்ன செய்யமுடியுமோ செய்வேன் என்று உறுதியளிக்கிறேன். ரஜினி அவர்கள் முதல்வராக பதிவு ஏற்கும் நாள் வரை வேறு எதையும் குழப்பி கொள்ள வேண்டாம்.“ ரஜினி மட்டுமே இங்கே மாற்றத்தைக் கொடுக்க முடியும் ; அந்த வேலையை உங்களால் மட்டுமே நடத்தி முடிக்க முடியும். இது என் அசைக்க முடியாத நம்பிக்கை. அதற்கு வேண்டியது கொஞ்சம் யோசித்துச் செயலாற்றுவது. நல்லது நிச்சயம் நடக்கும். -மாரிதாஸ்

No comments:

Post a Comment