10% இடஒதுக்கீடுக்கு திமுக , திக , விடுதலை சிறுத்தைகள் கட்சிகாரர்கள் எதிர்கிறார்கள். காரணம் என்ன? எதும் அதில் குறையுள்ளதா? {கேள்வி: பத்மாவதி}
நீங்கள் எந்த பிரிவில் வருகிறீர் என்ற எண்ணத்தை விட்டு விட்டு நேர்மையாக யோசிக்கவும் , எளிமையாக பல குறைகளை கூற முடியும் இந்த இடஒதுக்கீட்டில் அதில் முக்கியமானவை
1.இடஒதுக்கீட்டின் மூலம் பயனடைந்து வாழ்க்கை தரம் முன்னேறிய பின்பும் அவர்கள் தொடர்ந்து அடுத்த அடுத்த இடஒதுக்கீட்டை பயன்படுத்துகிறார்கள் என்பது. இது யாருக்கு பாதிப்பு??
SC இடஒதுக்கீட்டில் முன்னேறிய ஒருவர் அந்த இட ஒதுக்கீட்டை விட்டு கொடுத்தால் அதனால் பயன்பெற போவது ஒரு ST , OBC அல்லது OC வகுப்பை சேர்ந்தவர் அல்ல, அதே SC வகுப்பை சேர்ந்த மற்றொரு ஏழை குடும்பம். மாநிலத்தில் பட்டியல் சமூகத்தினர் வாழ்வை இன்று வேகமாக முன்னேற விடாது தடுப்பது இது தான். ஒரே வீட்டில் 4பேர் அரசு ஊழியர்கள் , தாய் தந்தை அனைவருமே அரசு ஊழியர்களாக இருப்பதை நான் அறிவேன். ஆனால் ஒரு கிராமமே பட்டியல் சமூகமாக இருப்பர் ஆனால் யாரும் அரசு வேலையில் இல்லை. இந்த கொடுமை எதனால்? விட்டு கொடுக்க மனபான்மை இல்லாததால் நடக்கிறது. ஒரு பரமக்குடி அருகே இருக்கும் கிராமத்து பெண்ணும் - சென்னையில் அனைத்து வசதிகளுடன் CBSEல் படிக்கும் டாக்டர் மகளும் இருவருமே பிறப்பால் தலித் என்று ஒரே இடஒதுக்கீட்டில் போட்டி போடும் நிலை இருக்கிறது. இது முதல் குறை. அனிதா தற்கொலைக்குக் காரணம் அதே சமூகத்தைச் சார்ந்த இன்னொரு நபர் தான் காரணமாக இருக்கிறார். இது SC, ST, OBC அனைவருக்கும் பொருந்தும்.
2.எவ்வளவு வறுமையில் வாடினாலும் பிறப்பை அடையாளப்படுத்தி உதவி மறுக்கப்படும் சூழல். பொது பிரிவில் இருந்தாலும் பொருளாதாரத்தால் தாழ்த்தபட்ட நிலைக்கு வந்துவிட்ட குடும்பம் பல உண்டு. அவர்களுக்கு என்ன தீர்வு கண்டோம்??? இது இன்னொரு குறை.
3.இடஒதுக்கீட்டை மொத்தமாக அமலாக்கும் செய்யும் இடத்தில் ஏற்படும் குறை. எடுத்துகாட்டுக்கு, SC இடஒதுக்கீட்டில் பயன்பெற வேண்டிய சமூகம் மொத்தம் 75க்கும் மேல். ஆனால் இங்கே குறிப்பிட்ட ஒரு நான்கு இல்லை ஐந்து சமூகத்தினர் தான் அதிகம் பயன்பெறுகிறார்கள். இன்னும் பல சமூகத்தில் டாக்டர் ஒருவர் கூட ஆனது இல்லை. வசதியாக இதை மறைத்து பொத்தாம் பொதுவாக அரசியல் செய்கிறார்கள் திருமாவளவன் போன்றவர்கள். ஜாதி ஒழிப்பு பேசும் நபர்கள் கூட இதை பேசுவது இல்லை. பேசவே மாட்டார்கள். எங்கே பட்டியல் சமூகத்தில் இருக்கும் அனைத்து ஜாதிவாரியாக எந்த எந்த சமூகத்திற்கு எவ்வளவு டாக்டர் பட்டம் கிடைத்தது என்று ஒவ்வொரு ஆண்டும் விவாதம் செய்ய கூறுங்கள் பார்ப்போம்! வரமாட்டார்கள்! நலத்திட்டம் உதவி அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்று சேர்ந்ததா என்று கண்காணிக்க சரியான அளவுகோல் இல்லாமல் இருப்பதும் இன்னொரு குறை.
இன்று பொது பிரிவில் இருக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இது மேலே கூறியவற்றில் இரண்டாவது குறையை தீர்க்கிறது. மீதம் இருக்கும் குறைகளை 2021ல் மக்கள் கணக்கெடுப்புக்கு பின் நரேந்திர மோடி தீர்ப்பார் என்று நம்புகிறேன். இப்போ விசயத்திற்கு வரலாம்:
------------------------------------------------------------------
சமூக நீதிக்கு எதிரானது என்று ஸ்டாலின், திருமாவளவன் போன்றவர்கள் எதிர்க்கிறார்களே?
"இவர்களுக்கு உதவுங்கள் என்று கூறலாம். அதில் தவறு இல்லை. ஆனால் வறுமையில் இருந்தாலும் அவனுக்கு உதவாதீர் என்று கூறலாமா??? எவ்வளவு பெரிய மானங்கெட்ட அரசியல் பிழைப்பு இது??? திராவிட கட்சி பேசும் சமூக நீதியும், மதச்சார்பின்மையும் போன்ற ஒரு கேலிக்கூத்தான சிந்தனை வேறு எதுவும் இல்லை இந்த உலகத்தில்.
கொஞ்சம் சிந்தியுங்கள்: நரேந்திர மோடி SC, ST இந்த வகுப்பில் இருக்கும் இடஒதுக்கீட்டை ரத்து செய்தாரா? இல்லை குறைத்தாரா??? இல்லை இருக்கும் இடஒதுக்கீட்டில் இருந்து குறிப்பிட்ட சதவீதத்தினை பிடிங்கி 10% இடஒதுக்கீட்டை உருவாக்கினாரா??? அவர்களின் இடஒதுக்கீட்டு சதவிகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. இது வரை என்ன சலுகைகள் கிடைத்ததோ அதே இன்றும் அப்படியே கிடைக்கும். கூடுதலாக 10% இடஒதுக்கீட்டை உருவாக்கி அறிவித்துள்ளார் நரேந்திர மோடி. அடுத்தவனுக்கு உதவ கூடாது என்று கூற அசிங்கமாக இல்லை???
இது என் நாடு, இதில் அனைத்து சமூகத்தில் இருக்கும் குழந்தை அனைத்தின் மீதும் எனக்கு அக்கறை கொள்ள எண்ணம் வேண்டும். அந்த பரந்த எண்ணம் இல்லாது போனால் எதற்கு பொது வாழ்க்கை? அந்த குழந்தை வறுமையில் வாடினாலும் உதவாதீர் முன்னுரிமை கொடுக்காதீர்??? இது எல்லாம் ஒரு எண்ணம்??? வெக்கப்படுங்கள் ஸ்டாலின் அவர்களே.
கொஞ்சம் சிந்திக்கவும் :
Pradhan Mantri Adarsh Gram Yojana இதன் மூலம் 50% மேல் தலித் மக்கள் வாழும் கிராமங்களைத் தேர்வு செய்து அந்த இடங்களில் தண்ணீர் தொட்டி முதல் சாலைகள் வரை அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்க தனி திட்டம், Babu Jagjivan Ram Chhatrawas Yojna திட்டம் மூலம் தலித் மாணவர்களுக்கு பெண்கள், ஆண்கள் இருவருக்கும் தங்கும் விடுதிகள் கட்டி கொடுப்பது. Mahila Adhikarita Yojana (MAY) , Mahila Samridhi Yojana (MSY) என்று சில பல திட்டங்கள் அவர்கள் வாழ்க்கை முன்னேற்றம் காணவேண்டி உருவாக்கப்பட்டு மத்திய அரசால் நடத்தப்படுகிறது.
National Scheduled Castes Finance and Development Corporation (NSFDC), National Safai Karamcharis Finance and Development Corporation (NSKFDC), Special Central Assistance to Scheduled Castes Sub-Plan (SCSP), Scheme of Assistance to Scheduled Castes Development Corporations (SCDCs), Micro Credit Finance (MCF), Types of Training programmes for SC/ST (Workshops, Job Fairs) என்று தலித் மக்கள் தொழில் தொடங்க, அவர்களுக்கு அதில் தகுந்த சலுகைகள் கொடுக்க முன்னுரிமை கொடுப்பதன் மூலம் அவர்கள் தொழில் முனைவோராக முன்னேற்றம் காண சில பல திட்டங்கள்.
Dr. Ambedkar Foundation, Dr. Ambedkar Medical Aid Scheme, Dr. Ambedkar National Merit Award Schemes, Dr. Ambedkar National Merit Award Scheme for Secondary (Class 10th, 12th) Examination, Dr. Ambedkar National Relief Scheme for SC victims of atrocities, Dr. Ambedkar Foundation National Essay Competition Scheme, Dr. Ambedkar Scheme for social integration through inter-caste marriages, Collected Works of Babasaheb Ambedkar (CWBA) Project என்று சில பல திட்டங்கள் தலித் மாணவர்களுக்குச் சமூகத்தில் நல்ல நிலையை எட்டவும் சமூகத்தில் தகுந்த பிரதிநிதித்துவம் கிடைக்கவும் வழிவகை செய்கின்றன. இது தவிர மாநில அரசு திட்டங்கள் தனியாக. இப்போ இந்த எந்த திட்டத்தை நரேந்திர மோடி நிறுத்தினார் இல்லை நிதி குறைத்தார்??? சொல்ல முடியுமா????
வேறு எந்த பிரதமரையும் விட கூடுதலாக பட்டியல் சமூகத்தினருக்கு கூடுதல் நிதி ஒதுக்கியவரும் நரேந்திர மோடி அவர்களே. Inter-caste marriages செய்துகொள்ளும் நபர்களுக்கு 2.5லட்சம் உதவி தொகை கூட்டி அறிவித்தது இதே அரசு தானே. யாரையும் வற்புறுத்தி பட்டியல் சமுகத்தில் இருந்து திருமணம் செய்ய கூற முடியாது. அதே நேரம் அப்படி வேற்றுமை பார்க்காது திருமணம் செய்வோரை ஆதரிக்கும் வண்ணம் பொருளாதாரத்தில் பின் தங்கிய தம்பதிகளுக்கு 2.5லட்சம் உதவி தொகையை அறிவித்து உதவியவர் இதே நரேந்திர மோடி தானே.
அன்று பொருளாதாரத்தில் 5லட்சம் கீழ் இருக்கும் தம்பதிகளுக்கு எப்படி கொடுக்கலாம் என்று எவரும் கேட்கவில்லையே ????
------------------------------------------------------------------------
ஜாதி ஒழியும் வரை இடஒதுக்கீடு ஒழிக்க கூடாது??? இந்த திக, திருமா போன்றவர்கள் கூற்று சரியா?
"தலித் என்றால் கல்வி மறுக்கபட்டவர்கள் , வேலை செய்தும் ஊதியம் இல்லாமல் ஒடுக்கபட்டவார்கள் , தீண்டாமை மூலம் தாழ்த்தபட்ட நிலைக்கு தள்ளபட்ட சமூகம்". இது தான் உலக அளவிலான அர்த்தம். இது திருமா அவர்களே பலஇடங்களில் கூறிய விளக்கம். ஏன் என்றால் இது உலகம முழுவதும் இருந்தது என்பதால் அனைத்து நாடுகளிலும் இந்த வரையறைக்குள் வரும் சமூகம் உண்டு.
இப்போ உங்கள் சமூக நீதி சொல்லும் வரையறை என்ன??? அரசியல், அதிகார பகிர்வு, கல்வி , வேலை வாய்பு , இதை தாண்டி வாழ்வு சூழல் முன்னேற்றம் காண திட்டங்களை அரசு தீட்டுகிறது. இதில் சமூகம் மேம்பட முக்கியமானது இடஒதுக்கீடு. 100% இதற்கு தகுதியான மக்களுக்கு சென்று சேர்ந்தால் நான் முழுமையாக சந்தோசம் அடைகிறேன். 60 வருடங்கள் ஓடிவிட்டன.. இப்போ அடிப்படை கேள்வி என்னவென்றால் ஓரு டாக்டர் , அவர் மகள் டாக்டர் இந்த குடும்பம் எப்படி தலித் என்ற வரையறைக்கு உள்ளே வரும்??? கொஞ்சம் கூற முடியுமா ஸ்டாலின் திருமாவளவன் அவர்கள்??? அனைத்து விதத்திலும் இவர்கள் தலித் என்ற மேலே சொன்ன வரையறைக்குள் வர மாட்டார்கள். அந்த வரையறையில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில் மீண்டும் பிறப்பால் அடையாளபடுத்த வேண்டும் என்று கூறுவது முதலில் சரியல்ல.
இதே சமூகத்தில் பொது பிரிவில் இருக்கும் ஒருவரை எனக்கு தெரியும். நல்ல தண்ணீர் கேன் போடும் அந்த நபருக்கு ஒரு மகள், மன நோயாளியாக ஒரு மகன். வீட்டின் வறுமை சொல்ல வேண்டியது இல்லை. நான் நேரே உங்களை கூட்டி செல்லவும் தயார். இன்றய காலகட்டத்தை பொறுத்தவரை அந்த குடும்பம் பொருளாதார நிலையில் தாழ்த்தபட்ட நிலையில் இருக்கிறது. இன்றய தேதியில் அது தான் உண்மை- வறுமை. அந்த குடும்பத்திற்கு உதவி செய்ய விரும்புகிறார் நரேந்திர மோடி அதுவும் கூடுதலாக இடஒதுக்கீடு உருவாக்கி கொடுத்தால் உங்களுக்கு என்ன பிரச்சனை???
{ஆக முதலில் ஜாதி இடஒதுக்கீடு அல்ல. இங்கே இருப்பது தலித் இடஒதுக்கீடு. இரண்டையும் போட்டு குழப்ப வேண்டும் என்று குழப்புகிறார்கள் இந்த திமுக, விசி கட்சி ஆட்கள். இரண்டாவது 2000வருடம் என்று ஆரம்பிக்க கூடாது. . 2000 வருடம் முன் எவனோ செய்த குற்றத்திற்கு இன்று இருக்கும் இந்த வறுமையில் இருப்பவருக்கு உதவ கூடாது என்று நினைப்பது ஆரோக்கியமான சிந்தனை அல்ல. 3தலைமுறைக்கு முன் முன்னோர் செய்த பாவத்தை இன்று பிறக்கும் குழந்தை அனுபவிக்க வேண்டுமா??? இது தான் பிற்போக்கு சிந்தனை.
-------------------------------------------------------------
ஸ்டாலின் அவர்கள் கூறுகிறார் சட்டப்படி இது நடைமுறை படுத்த முடியாது ஏன் என்றால் 15(4) , 16(4) பிரிவிகளின் கீழ் இது முடியாது என்கிறார். அத்துடன் இது சமூக நீதிக்கு எதிரானது என்று குரல்கொடுக்கிறார். முதல் எதிர் குரல் வந்தது திருமாவளவன் அவர்களிடம் இருந்து. வறுமையில் இருப்பவனை கைதூக்கி விட வக்கு இல்லை என்றால் அது என்னையா சமூக நீதி??? சட்டம் யார் போட்டது??? நாம் தானே? அது காலத்திற்கு ஏற்றார்போல மாற்றி அமைக்க வேண்டியதும் நம் கடமை தானே. அது தானே சரி???
நீதிபதிகள் சட்டத்தை அமலாக்கம் செய்யும் இடத்தில் இருக்க வேண்டும் தவிர சட்டம் இயற்றும் இடத்தில் அல்ல. அது மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் வேலை. இது அடிகடி திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி அவர்கள் கூறும் வார்த்தை. இன்று இந்த மசோதா பாராளுமன்றத்தில் மக்கள் அவையில் 323 உறுப்பினர்கள், மாநிலங்கள் அவையில் 165 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியுள்ளது. பாராளுமன்றம் அடுத்து ஜனாதிபதிக்கு செல்லும். வேலை முடிந்தது. சும்மா பிதற்றல் ஸ்டாலின் அவர்கள் பேசுவது.
----------------------------------------------------------
தகுதி வரம்பு சரியாக நிர்ணயம் செய்துள்ளார்களா????
5ஏக்கர் மேல் விவசாய நிலம் இருக்கக் கூடாது , 1000SqFt மேல் தனி வீடு பரப்பளவு இருக்கக் கூடாது, குறிப்பிட்ட நகராட்சிகளில் 900SqFt மேல் சொந்த பிளாட்டில் குடியிருப்போருக்கு, பிற நகராட்சி அல்லாத பகுதிகளில் சொந்த 1800SqFt பிளாட் வைத்திருப்போருக்கு கிடையாது; வருட வருமானம் 8லட்சம் மேல் இருக்கக் கூடாது.
மாதம் 60,70000 சம்பளம் வாங்கலாம் ஆனால் IT ஊழியர்களில் 55% பேருக்கு மேல் வீடு இப்போதுதான் முதல் முறையாக வாங்குகிறார்கள் என்று ஒரு ஆய்வு தகவல் தருகிறது. எனவே முதல் முறையாக வாங்கும் நபர்களைக் கணக்கில் கொண்டு பார்த்தோமானால் இந்தத் தகுதி வரையறை சரி. மேலே இருக்கும் ஏதாவது ஒன்றில் நீங்கள் தகுதி இல்லை என்றாலும் இடஒதுக்கீடு கிடைக்க போவது இல்லை. எனவே சரியான கணக்கீடே.
-----------------------------------------
இறுதியாக :
இந்தியாவில் படித்தவர்கள் புள்ளிவிவரம் ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஒருமுறை எடுப்பது வழக்கம். அதனை கொண்டு திட்டங்கள் நடைமுறைபடுத்த அரசு முயற்சி செய்யும். 1961, 1971, 1981, 1991, 2001, 2011 என்று வெளியான புள்ளி விவரங்கள் ஒரு நிதர்சனமான உண்மையை காட்டுகிறது. 2011 புள்ளிவிவரம் கூறும் கணக்கு: இந்திய அளவில் 74.04% மொத்தம் படித்தவர்கள், அதில் பெண்கள் 65.46%, ஆண்கள் 82.14%. இதில் SC என்று பட்டியளிடபட்ட மக்கள் 66.10% மொத்தம் படித்தவர்கள், அதில் பெண்கள் 56.50%, ஆண்கள் 75.20%. ஆக இன்னும் இந்த ஒடுக்கபட்ட மக்கள் நிலை சராசரி நிலையை தொடவில்லை. 2011அதனால் இட ஒதுக்கீடு முறை தொடர்வதை யாரும் விவாதம் ஆக்கவில்லை. 1961 ல் இது எப்படி இருந்தது என்றால் , இந்திய அளவில் 18.32% மொத்தம் படித்தவர்கள், அதில் பெண்கள் 8.86%, ஆண்கள் 27.15%. இதில் SC மக்கள் 10.27% மொத்தம் படித்தவர்கள், அதில் பெண்கள் 3.29%, ஆண்கள் 16.96%. இதில் நாம் கவனிக்கவேண்டிய விவரம்: 2001 – 2011 இரண்டின் கணக்கெடுப்பில் வளர்ச்சி சதவீதம் 14% என்று பொது சராசரி இருக்க, SC மக்கள் மக்கள் வளர்ச்சி சதவீதம் 38%க்கும் மேல் இருக்கிறது. ஆக அடுத்த கணக்கெடுப்பு 2021ல் நடக்க வேண்டும். இந்திய நாட்டின் சராசரியோடு தலித் மக்கள் சராசரியும் நிகராக வளர்ந்து நிற்கும் என்று கணிக்கபடுகிறது.
அப்படி நடந்தால் தேசத்தில் 1950களில் தொடங்கிய தலித் மக்கள் கல்விக்காக அரசு எடுத்த முயற்சி பெரும் வெற்றி. இனி அந்த கல்வி சலுகைகள் என்பதை மாற்றி அமைத்து, தகுதியானவர்களுக்கு சென்று சேரும் விதம் உருவக்கவேண்டும். சரி தானே??? அன்று மேலே சொன்ன முதல் குறையும் , மூன்றவது குறையும் திருத்தபடும். 2021கணக்கெடுப்பு எதிர் நோக்கி அனைவரும் இருக்கிறார்கள். அதை விட்டால் 2031என்று தள்ளி போவது உறுதி. ஆக எனக்கு தெரிந்து இந்த கல்வி இடஒதுக்கீடு முறை 2021ல் தலித் தலைவர்கள் ஆதரவுடன் இதை மாற்றி அமைக்க விரும்பகிறது பிஜேபி அரசு. காங்கிரஸ் வந்தாலும் அதனை செய்தாக வேண்டும் என்ற கட்டாய சூழல் இருக்குகிறது... ஆனால் அதற்கு ஒரு துணிவு தேவை. மோடி வரக்கூடாது என்று ஒரு சாரார் துடிப்பதில் இந்த காரணமும் முக்கியமானது.
எந்த மாற்றமும் வரக்கூடாது என்று நினைத்து திட்டமிட்டு பிரச்சனை செய்கிறார்கள் விடுதலை சிறுத்தை கட்சி ஆட்கள். இவர்களை அனைத்து தரப்பு மக்களும் ஒன்று கூடி எதிர்க்க தயார் ஆகவேண்டும். திமுக என்ற கட்சியை முழுமையாக அனைத்து மக்களும் புறக்கணிக்க வேண்டும். இல்லை காலம் காலமாக இங்கே வாக்கு வங்கி அரசியலுக்கு முற்றுபுள்ளி வைக்கவே முடியாது.
இதில் ஸ்டாலின் செய்வது மிக கீழ்தரமான அரசியல் அன்றி வேறு இல்லை.
-மாரிதாஸ்
No comments:
Post a Comment