சரக்கு மற்றும் சேவை வரி மசோதோ அரசியல் சாசனத்தின்
122வது சட்டத் திருத்தமாக ராஜ்ய சபாவில் நிறைவேறியது. இதன் மூலம் நம் தேசம் ஒற்றைப் பொருளாதார மண்டலமாக உருவெடுக்கிறது. ஏற்கனவே லோக்சபாவில் ஒப்புதல் பெறப்பட்டு விட்ட இச்சட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம்
(01/04/2017) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரவிருக்கிறது.
தமிழகத்தைச் சேர்ந்த அ.இ.அ.தி.மு.க உறுப்பினர்கள் மட்டுமே இந்த மசோதாவிற்கு எதிராகக் குரல் கொடுத்து, வெளிநடப்பும் செய்தனர். காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட அனைத்து பிரதான கட்சிகளும் மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்தனர்.
13 உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க
202 ராஜ்ய சபா உறுப்பினர்களின் ஆதரவோடு மசோதா சட்ட வடிவம் பெற்றது.
மசோதா வெற்றிகரமாக நிறைவேறியதைத் தொடர்ந்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அனைத்துக் கட்சியினருக்கும், அனைத்து லோக்சபா, ராஜ்யசபா பிரதிநிதிகளுக்கும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
'தேச முன்னேற்றத்திற்கான படிக்கல்' என்று இதை வர்ணித்த பிரதமர், சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவிற்குப் புகழாரம் சூட்டும் வகையில் 'இது கூட்டாட்சித் தத்துவத்தை மேலும் வலுப்படுத்தும்; முன்னேற்றப் பாதையில் நாம் அனைவரும் இணைந்தே பயணிப்போம்' என்றும் கூறினார்.
இதன் மூலம் பல்முனை வரி விதிப்பு முறை மாற்றப்பட்டு ஒற்றை வரிவிதிப்பு முறை நாடு முழுவதும் அமலாகும்.
தற்சமயம் ஒரே பொருளுக்கு 17
விதமான நேரடி மற்றும் மறைமுக சேவை, விற்பனை வரிகள் விதிக்கப்பட்டு வருகிறது. இது மாற்றப்பட்டு இனி ஒரே ஒரு வரி மட்டுமே வசூலிக்கப்படும்.
இது வரையில் ஒரு கடைநிலை விற்பனைப் பொருளுக்கு பல்வேறு நிலைகளில் வெவ்வேறு வரிகள் மீண்டும் மீண்டும் செலுத்தப்பட்டன, அதே போல ஒரே பொருளுக்கு பல்வேறு மட்டங்களில் மீண்டும் மீண்டும் வரி செலுத்த வேண்டிய கட்டாயம் இருந்தது. இனி அங்கனம் வரிக்கு வரி செலுத்தத் தேவையில்லை.
ஒற்றை வரிவிதிப்பு முறை வரி செலுத்துவதை ஊக்குவிக்கும். வரி செலுத்துவோரை இரு மட்டங்களிலும் கண்காணிக்க ஏதுவாகிறது. இதனால் வரி ஏய்ப்பு தடுக்கப்படுகிறது.
எந்தப் பொருள் அல்லது சேவைக்கும் வரி விலக்கு கிடையாது.
இணையத் தள வர்த்தகம் ஊக்குவிக்கப்படும்.
மூலதனப் பொருட்களின் விலை
12% முதல் 14% வரை குறையும். இதனால் மூலதனப் பொருட்கள் மீதான முதலீடு 6% அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு எடுத்துச் செல்லப்படும் பொருட்கள் மீதான 2%
வரி நீக்கப்படுகிறது. இதனால் தடையற்ற பொருளாதார மண்டலம் ஏற்படும்.
பொருட்களின் போக்குவரத்துச் செலவு குறையும்.
மேற்கூறிய காரணங்களால் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் குறைந்து உள்நாட்டுத் தயாரிப்பு அதிகரிக்கும்.
உள்நாட்டில் தயாரிக்கப்படுவதாலும், சீரான வரி விதிப்பாலும் கடைநிலைப் பொருட்களின் விலை வெகுவாகக் குறையும்.
உள் நாட்டு உற்பத்தியால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.
ஏற்றுமதி அதிகரிக்கும். அதன் மூலம் வருவாய் பெருகும். நாட்டின் நிதி நிலைமை சீராகும்.
நாளடைவில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும்.
ஒட்டுமொத்தத்தில் தேசத்தின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும்.
இது வரை வெவ்வேறு பெயர்களில் வசூலிக்கப்படும் ஏறக் குறைய
28% முதல் 32% மொத்த வரியானது இனி ஒற்றைப் பெயரில் அனைத்து நிலைகளிலும் சேர்த்து
18% அல்லது 20% வரியாக வசூலிக்கப்படும்.
உதாரணமாக ஒருவர் தான் வாங்கிய மூலப் பொருளை மதிப்புக் கூட்டி, லாபத்தையும் சேர்த்து விற்கிறார் என்றால் தனது பங்களிப்பான மதிப்புக் கூட்டல் மற்றும் லாபத்திற்கான
20% வரியை மட்டுமே கூடுதலாகச் செலுத்துவார். மூலதனப் பொருளுக்கு முதல் முறையிலேயே
20% வரி செலுத்தப்பட்டிருக்கும்.
ஒற்றை வரி விதிப்பிற்கான முன் யோஜனை முதல் முறையாக
2003-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் திரு வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் முன் வைக்கப்பட்டது.
2006-07
ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் காங்கிரஸ் அரசு இத்திட்டத்தை சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவாக அறிவித்தது.
22/03/2011-
அன்று அரசியல் சாசனத்தின் 115-ஆவது சட்டத் திருத்தமாக இந்த மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த லோக்சபாவின் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில்
2014-ஆம் ஆண்டு அந்த மசோதா காலாவதி ஆனது.
பாரதப் பிரதமராக திரு நரேந்திர மோதி அவர்கள் பொறுப்பேற்ற உடன்
19/12/2014-அன்று நம் அரசியல் சாசனத்தின் 122-ஆவது சட்டத் திருத்தமாக சரக்கு மற்றும் சேவை வரி மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.
06/05/2015
அன்று சரக்கு மற்றும் சேவை வரி மசோதா லோக் சபாவில் நிறைவேறியது.
காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் போட்ட முட்டுக் கட்டையினால் ஓராண்டுக்கும் மேலாக மசோதா நிறைவேற்றப்படவில்லை.
பேச்சு வார்த்தை நடத்தி அனைத்துக் கட்சியினரது கருத்துக்களையும், ஒப்புதலையும் பெற்ற மத்திய அரசு இந்தக் கூட்டத் தொடரில் மசோதாவை ராஜ்யசபாவில் தாக்கல் செய்தது.
03/08/2016
அன்று சரக்கு மற்றும் சேவை வரி மசோதா ராஜ்ய சபாவிலும் நிறைவேறியதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஏப்ரல்
(01/04/2017) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும்.
29 மாநிலங்களும், 9
மத்திய நேரடி ஆளுகைப் பிரதேசங்களும் அந்தந்த மாநிலங்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.
புதிய நடைமுறை என்பதால் பயன்பாட்டிற்குக் கொண்டு வர சற்றே கால தாமதம் ஆகலாம்.
மதிப்பிற்குரிய திரு H
raja ji பதிவிலிருந்து
No comments:
Post a Comment